மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் 12 சதவீதமே மக்களை சென்றடையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் 12 சதவீதம் மட்டுமே பணமாக மக்களை நேரடியாக சென்றடையும் நிலை உள்ளதாக நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே வள்ளியூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
100 நாள் வேலை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளில், 213 பஞ்சாயத்துகளில் மட்டுமே 100 நாள் வேலை திட்டப்பணி நடைபெறுகிறது. மொத்தம் 6,413 பயனாளிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். விருதுநகர் யூனியனில் உள்ள வள்ளியூரில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த பஞ்சாயத்தில் 813 பயனாளிகள் பதிவு செய்து 545 பேர் வேலைக்கு வரும் நிலையில் உள்ளனர். ஆனால் 70 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதோடு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த ஊதியமே தினசரி வழங்கப்பட்டு வருகிறது.
அவசியம்
இதற்கு காரணம் கிராமப்புற பெண்களுக்கு சாத்தியப்படாத வகையில் வேலை அளவீடு செய்து தரப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் முழுமையாக இந்த வேலையை செய்ய முடியாத நிலையில் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போதைய அறிவிப்பில் இந்த திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. தற்போதைய நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே 100 நாள் வேலை திட்டம் நடைபெறுவதால் தமிழகம் இந்த திட்டத்தின் கீழ் அதிக நிதியை பெற வாய்ப்புள்ளது. மேலும் 100 சதவீத ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளதால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கிராமங்களில் பதிவு செய்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டரிடம் இதுபற்றி பேசியுள்ளேன், அரசாணை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். எனவே வரும் நாட்களில் இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
12 சதவீதம்
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வழக்கம் போல் மாயாஜால வார்த்தைகளால் நாட்டு மக்களை மயக்கியுள்ளார். அவர் அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் 12 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 914 கோடி மட்டுமே பணமாக மக்களை சென்றடைகிறது. மீதம் உள்ள தொகை பல்வேறு திட்டங்களாகவும், முதலீடுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேலாகும். உடனடி பலன் கிடைக்க போவதில்லை. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி துறையில் உள்ள 16 பொதுத்துறை நிறுவனங்களில் 12 நிறுவனங்களும், விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள 9 பொதுத்துறை நிறுவனங்களில் 5 நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும் தனியார் முதலாளிகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நலனில் அக்கறை இல்லை.
தேவை
தமிழகத்தில் மாநில அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்றும், மதுரை மண்டலம் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழக பெண்கள் இதற்கான தீர்ப்பை வழங்குவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்துவதில் பள்ளி கல்வித்துறை அவசரம் காட்ட வேண்டியதில்லை. மாணவர்களின் உடல் நலன் தேர்வைவிட அதிக முக்கியமானது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு தேர்வை நடத்தலாம்.
வலியுறுத்தல்
விருதுநகரில் எனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிடத்தை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இதனை கட்டுவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், வட்டார தலைவர் வைரவசாமி, வள்ளியூர் பஞ்சாயத்து தலைவர் வெங்கட்ராஜலு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story