ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின


ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின
x
தினத்தந்தி 19 May 2020 11:42 AM IST (Updated: 19 May 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத்தொடங்கின. முககவசம் அணிந்தபடி அலுவலர்கள் பணியாற்றினர்.


ஈரோடு, 

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4-வது கட்டமாக 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கத்தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்துக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரவேண்டிய பணியாளர்கள் அதற்கு உரிய டி.என். இ-பாஸ் பெற்று வந்தனர். உள்ளூர்களில் இருந்து வந்த பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் அலுவலகங்களுக்கு வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் நேற்று இயங்கின. பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு அலுவலகங்களில் இருக்கை அமைத்து பணியை செய்தனர். அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து இருந்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள், கருவூலத்துறை, பொதுப்பணித்துறை, ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றியக்குழு அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் நேற்று அனுமதிக்கப்பட்ட பணியாளர்களுடன் இயங்கியது.

Next Story