கடல் சீற்றம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 20 May 2020 4:45 AM IST (Updated: 20 May 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றம் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

திருவொற்றியூர், 

புயல் சின்னம் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கடலில் ராட்சத அலைகள் தோன்றி கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் தோன்றிய ராட்சத அலைகள் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி எண்ணூர் விரைவு சாலையில் வந்து விழுகிறது. இந்த நிலையில் காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் இருந்து கடலுக்குள் பைபர் படகுகளில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் மீன்பிடி வலைகள் மற்றும் பைபர் படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்து வரும் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. சிறிய வகை பைபர் படகுகளில் மட்டுமே குறைந்த தூரத்துக்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

இதனால் ஓரளவு மீன்வரத்து இருந்ததால் மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து மீனை வாங்கிச் சென்றனர். தற்போது கடல் சீற்றம் காரணமாக 3 நாட்களாக பைபர் படகுகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஆனாலும் காசிமேடு மீன் சந்தைக்கு வந்த பொதுமக்கள் பலர் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Next Story