தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா


தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2020 5:00 AM IST (Updated: 20 May 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தாம்பரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தாம்பரம், 

சென்னை கிழக்கு தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயது பெண், மேற்கு தாம்பரம் அய்யாசாமி தெருவில் உள்ள மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களில் சிலருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த பெண், அவருடைய கணவர் மற்றும் மகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதியானது.

இதேபோல் இரும்புலியூர் திலகவதி நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கணவருக்கு கடந்த 17-ந் தேதி தொற்று உறுதியான நிலையில், நேற்று இவருக்கும் நோய் தொற்று உறுதியானது. குரோம்பேட்டை, ஜோசப் காலனியை சேர்ந்த 36 வயது பெண், புது பெருங்களத்தூர், காமராஜர் தெருவைச் சேர்ந்த 71 வயது முதியவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்தது. இவர்களில் 190 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அதன்படி பூந்தமல்லி, ஆவடி பகுதியில் தலா 2 பேருக்கும், திருவேற்காடு, வில்லிவாக்கம், திருவள்ளூர், மீஞ்சூர் பகுதியில் தலா ஒருவருக்கும் என 8 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story