கர்நாடக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா அறிவிப்பு


கர்நாடக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 3:00 AM IST (Updated: 20 May 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர்கள் சதீஸ் ஜார்கிகோளி, சலீம் அகமது, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், எச்.கே.பட்டீல், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

“பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். அவர் யாருடனும் ஆலோசிப்பது இல்லை. எதிர்க்கட்சி தலைவர்களை அவர் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது.

எந்த பயனும் இல்லை

அமைப்புசார், அமைப்புசாரா, மரபுசார் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இதற்கு காரணம். விமான போக்குவரத்தை ஆரம்பத்திலேயே ரத்து செய்திருந்தால், கொரோனா இந்த அளவுக்கு பரவியிருக்காது. தங்களின் தவறை மூடிமறைக்க மற்றவர்களை குறை சொல்கிறார்கள்.

கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளனர். அது ஒன்றை தவிர வேறு ரூ.20 லட்சம் கோடி தொகுப்பால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பொருளாதார நிபுணர்களே இதை சொல்கிறார்கள். காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமது எம்.எல்.ஏ.க்கள் ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

யாருக்கும் கிடைக்கவில்லை

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதில் முதல்-மந்திரி எடியூரப்பா முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டார். பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு நிதி உதவி தொகுப்பை எடியூரப்பா அறிவித்தார். அந்த தொகுப்பின் பயன் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. தொகுப்பு என்ற பெயரில் பிரதமரும், எடியூரப்பாவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

இதுகுறித்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தலை நடத்தாமல், பா.ஜனதாவினரை நியமனம் செய்ய மாநில அரசு சதி செய்துள்ளது. தற்போது உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு அரசை வற்புறுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் துக்ளக் தர்பார் ஆட்சி நடக்கிறது. ஊழல் அதிகரித்துவிட்டது. நமது காங்கிரஸ் அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்று பிரதமர் மோடி குறை கூறினார். இந்த பா.ஜனதா அரசை எத்தனை சதவீத கமிஷன் அரசு என்பதை மோடி கூற வேண்டும். வேளாண்மை சந்தை சட்ட திருத்தம் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும்.

இந்த போராட்டம் நாளை (அதாவது இன்று) முதலே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இது விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெறும். அதன் பிறகு மாவட்ட, தாலுகா அளவில் போராட்டங்கள் நடத்தப்படும்.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story