ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது
ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தளி,
ஆனை மலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் கோடைகால கணக்கெடுப்புப்பணிகள்் தொடங்கியது. இந்த பணி 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதிகளான கொழுமம், வந்தரவு வனச்சரகங்களில் உள்ள 34 சுற்றுகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நாள் ஒன்றுக்கு 5 கிலோமீட்டர் வீதம் 3 நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவுசெய்யப்படும்.
சாணம்
அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டு பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவையினங்கள், மனிதர்கள் நடமாட்டம், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவுசெய்யப்படும். மேலும் யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுபன்றி, நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெறும்.
அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவரவகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இறுதி நாளான 25- ந் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ள வனவிலங்குகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொருமுறை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் போது வனத்துறையினருக்கு உதவியாக தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அவர்கள் பணியில் ஈடுபடவில்லை.
ஆய்வு
அமராவதி வனச்சரகம் மஞ்சம்பட்டி தெற்கு சுற்றில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் ஆய்வு செய்தார். அப்போது உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள் வனவர்கள் வனக்காப்பாளர்கள். வனக்காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story