கொப்பலில் 315 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி செலவில் அரிசி பூங்கா மந்திரி பி.சி.பட்டீல் தகவல்


கொப்பலில் 315 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி செலவில் அரிசி பூங்கா மந்திரி பி.சி.பட்டீல் தகவல்
x
தினத்தந்தி 20 May 2020 4:15 AM IST (Updated: 20 May 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

கொப்பலில் 315 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி செலவில் அரிசி பூங்கா அமைக்கப்படுவதாக மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

கொப்பல், 

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கொப்பலில் அரிசி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக நடைபெற்று வரும் பணிகளை நான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 315 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி செலவில் அந்த பூங்கா அமைக்கப்படுகிறது. இதில் கர்நாடக அரசு 60 சதவீதமும், மத்திய அரசு 40 சதவீதமும் வழங்குகின்றன.

இந்த பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் நமது மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், வெளிமாநிலங்களுக்கு செல்வது தடுக்கப்படும். நெல் தொடர்பான நிறுவனங்கள், பதப்படுத்தும் மையங்கள் தொடங்கப்படும். இதனால் நெல்லுக்கு தொழில் ரீதியிலான வாய்ப்பு கிடைக்கும். மேலும் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும்.

நல்ல தரமான நெல் விதைகளை நாம் தயாரிப்பதன் மூலம் இது உலக அளவில் பிரபலமாகும். துங்கபத்ரா, கிருஷ்ணா மேல் அணை திட்ட எல்லைக்குள் பல்லாரி, கொப்பல், ராய்ச்சூர், பாகல்கோட்டை, விஜயாப்புரா ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 45 லட்சம் டன் நெல் உற்பத்தியாகிறது.

நெல் துணை பொருட்கள் உற்பத்தியும் கர்நாடகத்தில் அதிகரிக்கும். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்த அரிசி பூங்காவில் அரிசி மாவு, அரிசி ரவை, அரிசி தவிடு, எண்ணெய், நூடுல்ஸ், கால்நடைகளுக்கு தேவையான உணவு, நெல் தவிடு உற்பத்தி மையங்களும் அமைகின்றன.

அந்த பூங்காவில் சில்லரை வர்த்தகர்கள், கிடங்கு நடத்துபவர்கள், கொள்முதல் நிறுவனங்கள், பேக்கிங் அமைப்புகளும் இடம் பெறும். இதன் மூலம் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் குறையும். முக்கியமாக உணவு பதப்படுத்தும் நிறுவனத்தை அமைக்க அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே நவிலு என்ற இடத்தில் புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு மந்திரி பி.சி. பட்டீல் கூறினார்.

Next Story