மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
“மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை” என்று குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
15-வது நிதி கமிஷன், சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக சரிந்தது. அவற்றுக்கு உதவ வேண்டும் என்று அந்த கமிஷன் பரிந்துரை செய்தது. கொரோனாவால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
கொரோனாவால் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று அந்த நிதி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?. ஆனால் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு நிதி தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு எந்த நிதி உதவியும் அறிவிக்கவில்லை. நிவாரணம் என்றால் கடன் கொடுப்பது அல்ல.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பால், பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. 40 கோடி மக்கள் வறுமையில் உள்ளனர். அந்த தொகுப்பு ஏழை மக்களுக்கு உதவாது. தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்துவதாக கூறியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு ரூ.2,500 கோடி மட்டுமே செலவாகும்.
மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கொடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு, ஒரு பொய் மூட்டை. முட்டாள்தனமான அறிவிப்புகள். மக்களை திசை திருப்பவே இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசால் எழுந்துள்ள நெருக்கடியை சமாளிக்க சிறுதொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் அறிவிக்கவில்லை. தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பொய் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது.
பொய்யான அறிவிப்புகளை கைவிட்டு, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை அறிவிக்க வேண்டும். ஏழைகளின் வயிற்றை நிரப்ப திட்டங்களை அறிவிக்க வேண்டும். கர்நாடக அரசு அனைத்து சேவைகளையும் அனுமதித்துள்ளது. உணவகங்களையும் அனுமதிக்க வேண்டும். பிரதமர் கேர் நிதிக்கு சென்ற நிதியை செலவு செய்யவில்லை.”
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story