பெங்களூருவில் லால்பாக், கப்பன் பூங்கா திறக்கப்பட்டன முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
பெங்களூருவில் நேற்று லால்பாக் மற்றும் கப்பன் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று லால்பாக் மற்றும் கப்பன் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. இதனால் ஏராளமானோர் பூங்காக்களுக்கு வந்து நடைபயிற்சி மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் பெங்களூருவில் உள்ள லால்பாக், கப்பன் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா ஊரடங்கை தளர்த்தி பெங்களூருவில் உள்ள அனைத்து பூங்காக்களையும் திறக்க அனுமதி அளித்தார். அதன்பேரில் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டன.
காலை 7 மணி முதல் 9 மணி வரைக்கும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் பூங்காக்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் லால்பாக் மற்றும் கப்பன் பூங்காவில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ள யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் பூங்காக்கள் திறக்கப்பட்டதும் ஏராளமானோர் திரண்டு வந்து நடைபயிற்சி மேற்கொண்டனர். லால் பாக் பூங்காவுக்கு வந்தவர்களை அங்கிருந்த ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து சானிடைசர் கொடுத்து கைகளை கழுவச்செய்து உள்ளே அனுப்பினர். கப்பன் பூங்காவிலும் அதேபோல் செய்தனர். ஆனால் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
அதேபோல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று காலையில் லால்பாக் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்த சிலர் கூறுகையில், “ஊரடங்கால் பூங்காக்கள் பூட்டப்பட்டதால் இவ்வளவு நாட்களாக நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தோம். தற்போது பூங்காக்களை திறக்க உத்தரவிட்ட முடிவை வரவேற்கிறோம்.
ஆனால் காலை 7 மணிக்கு பூங்காவை திறப்பதற்கு பதிலாக காலை 6 மணிக்கே திறந்தால் நாங்கள் வந்து நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு எங்களது அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்ல எளிதாக இருக்கும். அதனால் இனிவரும் நாட்களில் காலை 6 மணிக்கே பூங்காவை திறக்க அரசு உத்தரவிட வேண்டும்“ என்று கூறினர். இதேபோல் பெங்களூருவில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் நேற்று காலையிலும், மாலையிலும் ஏராளமான மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story