மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறப்பு: டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பம்புசெட் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி குறுவை சாகுபடிக்கு கடந்த 2008-2009-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜூன் 12-ந்தேதி திறப்பு
கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. வழக்கமாக மேட்டூர் அணையில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 100 அடி தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறப்பதால் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை நடவுப்பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆற்றுப்பாசனத்தை நம்பி நடவு செய்பவர்கள் தற்போது தங்கள் நிலங்களை உழுது தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை, நாகை, திருவாரூர்
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி 20 ஆயிரம் எக்டேரில் நடைபெற்றது. இதில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுவை 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 ஏக்கர் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 28 ஆயிரம் ஏக்கர் வரை பம்புசெட் மூலம் நடவுப்பணிகள் நடைபெற்றுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 77 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை பம்புசெட் மூலம் 8 ஆயிரத்து 750 ஏக்கரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.
நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை பம்புசெட் மூலம் 80 ஆயிரத்து ஏக்கர் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.
3.15 லட்சம் ஏக்கர்
அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதர பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் இந்த பகுதிகளில் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெறும். இதற்கு தேவையான விதைநெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது விவசாயிகள் விதை நெல் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறுவை தொகுப்பு திட்டம்
தற்போது கொரோனா ஊரடங்கினால் விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதால் தமிழக அரசு இந்த ஆண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணிக்கு 64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தண்ணீர் திறப்பதற்கு முன்பு விரைந்து முடித்து கடைமடை பகுதிக்கு எளிதில் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story