பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடின கர்நாடகத்தில் இயல்புநிலை திரும்பியது மக்களின் நடமாட்டம் குறைவு


பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடின கர்நாடகத்தில் இயல்புநிலை திரும்பியது மக்களின் நடமாட்டம் குறைவு
x
தினத்தந்தி 20 May 2020 5:00 AM IST (Updated: 20 May 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நேற்று முதல் பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முதல் பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின. இதனால் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளது. ஆனால் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தினார். இதனால் அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 4-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோ, வாடகை கார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 56 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று அரசு பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்க தொடங்கின. பெங்களூருவில் நேற்று சுமார் 1,500 பஸ்களின் சேவை தொடங்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பஸ்களில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை. ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 பேர் இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளுக்கு தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் நீண்ட தூர பயணத்தை ஊக்குவிக்கிறோம். தற்போது அவசர தேவை உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க தொடங்கியுள்ளனர். “கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்” பஸ்சில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் இடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் பண பரிமாற்றம் தவிர்க்கப்படுகிறது” என்றார்.

இதற்கிடையே பெங்களூரு பயணிகள் சங்கம், பாஸ் வாங்க வற்புறுத்தும் பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகி கூறும்போது, “பஸ்சில் பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக பாஸ் வாங்க வற்புறுத்துவது சரியல்ல” என்றார்.

பெங்களூருவில் நேற்று பஸ்கள் இயக்கப்பட்டாலும், பஸ்களில் அனுமதிக்கப்பட்டதை விட மிக குறைவான பயணிகளே பயணம் செய்தனர். பெங்களூருவில் இருந்து நேற்று 1,535 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறுகையில், “பஸ்களை இயக்க மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை நாளை(அதாவது இன்று) முதல் சரிசெய்வோம். வட கர்நாடகத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீதர், கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகள் நீண்ட தூரத்தில் உள்ளன. இரவு 7 மணிக்குள் அந்த பகுதிகளை போய் சேர முடியாது. அதனால் இன்று(நேற்று) அந்த பகுதிகளுக்கு பஸ்களை இயக்கவில்லை” என்றார்.

ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதில் வழக்கம்போல் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சிலர் மட்டுமே ஆட்டோக்களில் சென்றனர். கொரோனா அச்சத்தின் பிடியில் இருப்பதால், மக்கள் இன்னும் முழுமையாக வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. அனைத்து சேவைகளும் அனுமதிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. ஆனால் மக்கள் மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

ஆட்டோ டிரைவர் மஞ்சு என்பவரிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறை பயணிகள் இறங்கிய பிறகு கிருமிநாசினி கொண்டு ஆட்டோவை தூய்மைபடுத்த வேண்டும் என்று அரசு சொல்கிறது. இது சாத்தியமா?. அரசு எங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். நாங்களே கடந்த 2 மாதங்களாக வருமானம் இல்லாமல் இருக்கிறோம்” என்றார்.

பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணம் செய்தனர். பெங்களூருவில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கமான மக்களின் நடமாட்டத்தை காண முடியவில்லை. உப்பள்ளி-தார்வார், மங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதே நிலை தான் இருந்தது. தங்கும் விடுதிகள், மெட்ரோ ரெயில்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பெரிய வணிக வளாகங்கள்(மால்கள்), திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

கர்நாடகம்-மராட்டிய எல்லையில் அமைந்துள்ள பெலகாவியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் சாலைகளில் ஓடின. ஆனால் அங்கும் மக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பெங்களூருவில் முக்கியமான சாலைகளில் வாகனங்கள் நிரம்பி வழியும். ஆனால் இன்னும் அந்த நிலை திரும்பவில்லை. சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அடுத்து வரும் நாட்களில் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story