பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் ஏமாற்றம்


பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 20 May 2020 4:28 AM IST (Updated: 20 May 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நேற்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடாததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


புதுச்சேரி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. புதுவை மாநிலத்திலும் எல்லைகள் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெளியில் இருந்து யாரும் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

அனுமதி பெறாத பஸ், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. 4-ம் கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தடைகள் தளர்த்தப்பட்டன. அதாவது மதுக்கடைகள் திறப்பு, மாநிலத்துக்குள்ளேயே உள்ளூர் பஸ்களை இயக்குவது, கார், ஆட்டோக்கள் இயங்கலாம். கடைகள், ஓட்டல்கள் இரவு 7 மணி வரை திறந்து வைக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் அதன்படி நேற்று பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று காலை பஸ்களை எதிர்பார்த்து பஸ் நிறுத்தங்களில் காத்து நின்ற பொதுமக்கள் சிலர் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களுக்கு வந்து அங்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முதல்-அமைச்சர் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருந்தார். அவ்வாறு பயணிகளை அழைத்துச் செல்லும்போது கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று கூறி தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று பஸ்களை இயக்க மறுத்து விட்டனர்.

இதே கருத்தை வலியுறுத்தி கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.

புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த பஸ்களுக்கு கிருமி நாசினி தெளித்து அதன் பின்னர் தான் பஸ்களை இயக்க முடியும். ஆனால் அந்த பணிகள் தொடங்காத நிலையில் பஸ்கள் அனைத்தும் தற்போது பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுவை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதை இடமாற்றம் செய்யாததால் பஸ்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து தொடக்கம் என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘முதலில் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். பஸ் போக்குவரத்தை தொடங்கினால் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 

எனவே தற்போதைய கட்டணத்தில் பஸ்களை இயக்கினால் பெரும் நஷ்டம் ஏற்படும். ஆகையால் தான் தனியார் பஸ்களை ஓட்ட அதன் உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்’ என்றார்.

Next Story