பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டு வேலைக்காரருக்கு கொரோனா


பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டு வேலைக்காரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2020 5:15 AM IST (Updated: 20 May 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டு வேலைக்காரருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையை புரட்டி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்திய திரையுலகின் முன்னணி சினிமா தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூரின் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. அந்தேரியில் அவரது வீட்டில் வேலை பார்த்து வரும் சரண் சாகு என்ற 23 வயது வேலைக்கார வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சரண் சாகு கடந்த சனிக்கிழமை மாலை திடீரென உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். உடனே அவரை போனி கபூர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதில் சரண் சாகுவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி உடனடியாக மும்பை மாநகராட்சிக்கும், தான் வசிக்கும் குடியிருப்பு சொசைட்டி நிர்வாகிகளுக்கும் போனிகபூர் தகவல் தெரிவித்தார். சுகாதார பணியாளர்கள் சரண் சாகுவை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வேலைக்காரருக்கு கொரோனா

தனது வீட்டு வேலைக்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான், எனது மகள்கள் மற்றும் வீட்டில் இருக்கும் மற்ற பணியாளர்களும் நலமுடன் இருக்கிறோம். எங்கள் யாருக்கும் நோய்தொற்று அறிகுறிகள் இல்லை. ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. எனது வீட்டு வேலைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுத்த மராட்டிய அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் நன்றி. மாநகராட்சி மருத்துவ குழுவினரின் அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம். சரண் சாகு குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story