கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீஸ்காரர்கள் கைது


கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீஸ்காரர்கள் கைது
x
தினத்தந்தி 19 May 2020 11:10 PM GMT (Updated: 19 May 2020 11:10 PM GMT)

கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறித்து வைத்துக் கொண்டது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.



திருக்கனூர்,

புதுவை மாநில எல்லைப் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே வராதபடி கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் புதுவை மாநில எல்லைகளில் ஒன்றான திருக்கனூரிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு கடந்த 16-ந் தேதி தமிழக பகுதியான சித்தலம்பட்டு பகுதியை சேர்ந்த தமிழக அரசு போக்குவரத்து கழக டிரைவரான சங்கர் (வயது43), அவரது நண்பர் சோமு ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து 18 மதுபாட்டில்களை விலை கொடுத்து வாங்கி கடத்தி வந்தனர்.

திருக்கனூர் சோதனைச் சாவடி அருகே வந்தபோது சங்கர், சோமுவை நிறுத்தி அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம், ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் ஆகியோர் சோதனை போட்டனர். அப்போது அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறித்துக் கொண்டு மீதம் 3 பாட்டில்களை மட்டும் கொடுத்து போலீசார் அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம், ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் 4 பேர் மீதும் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் செல்வம், கோகுலன், மணிகண்டன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பிரசன்னாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story