ஆன்லைன் மது விற்பனையை பயன்படுத்தி மதுபிரியர்களுக்கு வலைவிரிக்கும் மோசடி கும்பல்
ஆன்லைன் மது விற்பனையை பயன்படுத்தி மதுபிரியர்களிடம் ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபட்டு வருகிறது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் முன் ஆயிரக்கணக்கில் குடிமகன்கள் திரண்டனர். இதனால் சமூக விலகல் காற்றில் பறந்தது. இதையடுத்து, மதுக்கடைகள் முன் கூட்டம் திரளுவதை தடுக்க மராட்டிய அரசு ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று வீட்டுக்கு சென்று மது விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்தநிலையில், மராட்டிய அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி குடிமகன்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மோசடி கும்பல் இறங்கி உள்ளது.
இவர்கள் மும்பையில் உள்ள குறிப்பிட்ட சில மதுபான கடைகளின் பெயரில் போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி உள்ளனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு, அழைப்பு விடுத்து தேவையான மது விவரங்களை ஆர்டர் செய்யலாம் என போலி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
மதுவுக்கு அலையும் குடிமகன்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்படி கூறி அந்த கும்பல் மோசடியில் ஈடுபடுகிறது.
அந்த கும்பல் தங்களது மோசடி வலையில் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரையும் வீழ்த்த முயற்சி செய்துள்ளது. இதுபற்றி அந்த திரைப்பட தயாரிப்பாளர் கூறியதாவது:-
ஜூகுவில் உள்ள ஒரு கடையில் ரூ.40 ஆயிரத்துக்கு மது வாங்குவதற்காக பேஸ்புக்கில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்தேன். என்னிடம் ஆர்டர் எடுத்த நபர் முதலில் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறினார். இதனால் எனக்கு சந்தேகம் உண்டானது. அவர் மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்த கும்பல் மேற்கு வங்க மாநிலத்தின் அசன்சோல் மற்றும் பீகாரில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் செயல்படுகிறார்கள் என்பதை அறிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரபல மதுக்கடை ஒன்றில் மது வாங்குவதற்காக பேஸ்புக்கில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து மதுவை சப்ளை செய்வதற்கு ரூ.1,400-க்கு ஆர்டர் கொடுத்தேன்.
அப்போது மறுமுனையில் பேசியவர் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படி கூறினார். இதற்காக அவரிடம் ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறியபோது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது ஒரு மோசடி என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க டுவிட்டரில் தெரிவித்து உள்ளேன், என்றார்.
மதுபிரியர்களிடம் மோசடியில் ஈடுபடும் அந்த கும்பலை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story