மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது; மும்பையில் தற்போதைய நிலையே நீடிக்கும்


மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது; மும்பையில் தற்போதைய நிலையே நீடிக்கும்
x
தினத்தந்தி 20 May 2020 5:30 AM IST (Updated: 20 May 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மும்பை, 

கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ள மராட்டியத்தில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.

மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மராட்டியத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 158 ஆக உயர்ந்து உள்ளது.

அதேவேளையில் நேற்று மட்டும் 1,202 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியது சாதனையாக பார்க்கப்படுவதாகவும், இதுவரை 9 ஆயிரத்து 639 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதாகவும் மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் 4-வது ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மராட்டிய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக வணிக மற்றும் பிற நடவடிக்கைகளை அனுமதிப்பதற்காக கொரோனா பாதிப்பு அடிப்படையில் சிவப்பு மற்றும் சிவப்பு அல்லாதவை என 2 மண்டலங்களாக மாநிலத்தை வகைப்படுத்தி உள்ளது.

இதன்படி மும்பை, தானே, பால்கரை உள்ளடக்கிய மும்பை பெருநகர பிராந்தியம், புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ், நாசிக், துலே, ஜல்காவ், அகோலா மற்றும் அமராவதி ஆகிய இடங்களில் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை உள்ளிட்ட இந்த பகுதிகள் அனைத்தும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவை ஆகும்.

மாநிலத்தின் மற்ற 25 மாவட்டங்கள் சிவப்பு அல்லாத மண்டலத்தின் கீழ் வருகின்றன. சிவப்பு மற்றும் சிவப்பு அல்லாத மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு எல்லையை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நிர்ணயம் செய்வார்கள்.

குடியிருப்பு காலனிகள், வார்டுகள், போலீஸ் நிலைய பகுதிகள், கிராமம், கிராமங்களின் தொகுதி என கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவிக்க இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் முழு மாநகராட்சி பகுதியையும், தாலுகா பகுதியையும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதற்கு மாநில தலைமை செயலாளரை அணுக வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ளது போல் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் ஆகியவற்றை தவிர இந்த மண்டலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிவப்பு மண்டலத்தில் உள்ள கடைகள், மால்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படாவிட்டாலும் மழைக்கால முன்னெச்சரிக்கையாக பராமரிப்பு பணிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.

அதே நேரத்தில் உணவகங்கள் உணவு பொருட்களை தயார் செய்து வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்யலாம்.

சிவப்பு மண்டலத்தில் உள்ள துணை பதிவாளர், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் அல்லாத பணிகள், விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் 5 சதவீத ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

சிவப்பு அல்லாத மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்தவொரு அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து எந்த அனுமதியும் பெற தேவையில்லை.

மேலும் இங்கு சந்தைகள் மற்றும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம். அதே நேரத்தில் கூட்டம் அதிகளவில் திரண்டாலோ, சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டாலோ அவை மூடப்படும்.

விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள் மற்றும் பிற பொது திறந்தவெளிகளில் குழுக்களாக அல்லாமல் தனிநபர் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இங்கு சமூக விலகல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகள் வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநிலத்தின் கொரோனா நிலவரம், பொருளாதார மீட்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதன் மூலமும், இயல்புநிலையை சீராக மீட்டெடுப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என சரத்பவார் கூறினார்.

Next Story