திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்
x
தினத்தந்தி 20 May 2020 5:44 AM IST (Updated: 20 May 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதுடெல்லி, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனா மருத்துவ பரிசோதனை மையங்களை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கொரோனா பரிசோதனையை பொறுத்தவரை பெரும்பாலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், 2 முதல் 4 மாவட்டங்களுக்கு ஒரே இடத்தில் பரிசோதனை செய்வதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

திண்டுக்கல்லில் மையம்

எனவே, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரி இன்னும் கட்டப்படவில்லை. அதேநேரம் திண்டுக்கல்லில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் செயல்படுகிறது.

இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஆகும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவுபெற்றுவிடும். அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கேயே பரிசோதனை செய்யப்படும். அதன்மூலம் பரிசோதனை முடிவுகள் விரைவாக கிடைக்கும். மேலும் ஏராளமானோரை பரிசோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story