தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாளர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாளர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று கலெக்டர்கள் மலர்விழி, பிரபாகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட தொடங்கி உள்ளன. அரசு பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு சென்று வர ஏதுவாக பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், ஏரியூர், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், அனுமந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் தீர்த்தமலை, கம்பைநல்லூர், இருமத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு அரசு பஸ்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இயக்கப்படுகின்றன. பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கும் தொப்பூரில் இருந்தும் தினமும் காலை 9 மணிக்கும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அரசு பணியாளர்கள், அலுவலர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள் அனைவரும் அடையாள அட்டை மற்றும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, மருத்துவ பணியாளர்களுக்காக ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஊத்தங்கரையில் புறப்படும். திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் திருப்பத்தூரில் இருந்து புறப்படும். தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பர்கூர் வரை செல்லும் பஸ் காலை 7 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் தர்மபுரியில் இருந்து புறப்படும். ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக கிருஷ்ணகிரி செல்லும் பஸ் காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓசூரில் இருந்து புறப்படும்.
இதேபோல் அரூரில் இருந்து ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி, சந்தூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை 7.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் புறப்படும். தர்மபுரியில் இருந்து காரிமங்கலம், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரிக்கு வரும் 2 பஸ்கள் காலை 8.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் தர்மபுரியில் இருந்து புறப்படும். திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை 8.30 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் திருப்பத்தூரில் இருந்து புறப்படும். ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக கிருஷ்ணகிரிக்கு வரும் 2 பஸ்கள் காலை 9 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் ஓசூரில் இருந்து புறப்படும்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை செல்லும் பஸ் காலை 8.15 மணிக்கும், மாலை 6 மணிக்கும் கிருஷ்ணகிரியில் இருந்து புறப்படும். இந்த போக்குவரத்தின் போது, அரசு பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story