கோழிப்பண்ணைகளில் ஈக்கள் தொல்லை அதிகரிக்கும்; ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோழிப்பண்ணைகளில் ஈக்கள் தொல்லை அதிகரிக்கும்; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 20 May 2020 6:31 AM IST (Updated: 20 May 2020 6:31 AM IST)
t-max-icont-min-icon

கோழிப்பண்ணைகளில் ஈக்கள் தொல்லை அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும்(புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக முறையே 98.6, 98.6 மற்றும் 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில் காற்றின் ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் வரை அதிகமாகி விடும். அதோடு வெயிலின் தீவிரமும் அதிகமாகும் போது ஈக்களின் இன பெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும்.

எனவே ஈக்களின் தொல்லை கோழிப்பண்ணைகளில் அதிகம் காணப்படலாம். கோழி எருவை எப்போதும் உலர்வாக வைத்து கொள்ள வேண்டும். பழுதடைந்த தானியங்கி குடிநீர் வழங்கிகளை மாற்ற வேண்டும். இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

இதேபோல் கோடை மழையின் போது ஏற்படும் மின்னல் தாக்குதலில் இருந்து கால்நடைகளை காக்க மரங்கள் மற்றும் முள்கம்பி வேலிகளிலோ அல்லது அதன் அருகிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story