போதை ஊசி போட்ட சிறுவன் சாவு: 2 மருந்து கடை உரிமையாளர்கள் மீது வழக்கு


போதை ஊசி போட்ட சிறுவன் சாவு: 2 மருந்து கடை உரிமையாளர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 May 2020 6:59 AM IST (Updated: 20 May 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் இறந்தது தொடர்பாக 2 மருந்து கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 17). இவன் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தான். இவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் 3 பேருடன் அந்த பகுதியில் உள்ள கரட்டிற்கு சென்றான். அங்கு அவன் கையில் போதை ஊசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் அடைந்த அவனை நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அஜித்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனது, நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் அதிக போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் கையில் போட்டதும், அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்ததும் தெரியவந்தது.

மேலும் சிறுவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை எங்கு வாங்கினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை தாதகாப்பட்டி கேட் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள 2 மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கியது தெரியவந்தது

இந்த நிலையில் சேலம் மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் குருபாரதி மேற்பார்வையில் மருந்து கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர்கள் ரேகா, மாரிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் தாதகாப்பட்டி கேட் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள அந்த 2 மருந்து கடைகளிலும் சோதனை நடத்தினர். 

இதையடுத்து அந்த மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது மருந்தாளுநர் இல்லாமல் மருந்து கொடுத்தல், மருந்து பதிவேடுகள் முறையாக பராமரிப்பது இல்லை, பில் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தல், டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த கடைகளிலிருந்து மாத்திரைகளை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும் அந்த மருந்து கடை உரிமையாளர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story