மேற்கு புறவழிச்சாலை பணி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


மேற்கு புறவழிச்சாலை பணி:  நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2020 7:12 AM IST (Updated: 20 May 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிக்கு தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் தனியாரிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்துவது குறித்து பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குளி, ஜமீன் முத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார்கள் தணிகவேல், வெங்கடாச்சலம், நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளர் ராணி, உதவி கோட்ட பொறியாளர் விஜயலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். அதை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நில உரிமையாளர்கள் சிலர் ஆட்சேபனைகளை தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கோவை ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோட்டை இணைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை கோவை ரோட்டில் சங்கம்பாளையத்தில் இருந்து ஆர்.பொன்னாபுரம், ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள 3½ மீட்டர் ஒருவழிச்சாலை 14 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 32 ஆயிரத்து 224 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த சாலை பணிக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.5½ கோடி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும். நில உரிமையாளர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் தொடர்பாக அரசின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பாசன கால்வாய்கள்

கூட்டத்தில் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சாலை பணிக்கு எத்தனை அடி நீளம் மற்றும் அகலத்தில் நில எடுப்பு செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் நிலத்திற்கு எவ்வளவு நஷ்டஈடு, அதில் உள்ள தென்னை மரங்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு என்பதை தனி, தனியாக தெளிவாக தெரிவிக்க வேண்டும். இதற்கிடையில் அதிகப்படியான சலுகைகள் கிடைக்க மத்திய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில எடுப்பு செய்ய வேண்டும். நரிக்குறவர் காலனியில் உள்ள பள்ளி சுற்றுச்சுவரை இடித்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி விடும். எனவே சுற்றுச்சுவரை அகற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலை விரிவுப்படுத்தப்படும் பகுதிகளில் 5 இடங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட கால்வாய் செல்கிறது. கால்வாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சாலை பணிக்காக கால்வாய்களில் மாறுதல் செய்தால் விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாது. எனவே பாசன கால்வாய் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story