நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர் 2,750 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர். 2,750 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி,
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு நீலகிரி மாவட்டம் திரும்பிய 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் என மொத்தம் 9 பேருக்கு ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களில் சில மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நீலகிரியில் இருந்து காய்கறிகளை ஏற்றி, இறக்க கோயம்பேடு சென்று வந்தவர்கள் 45 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்பில் இருந்த 21 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டதில், லாரி டிரைவரின் சகோதரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
3 பேர் குணமடைந்தனர்
இந்த 5 பேரில், 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லாததால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேர் மற்றும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவர் ஆகிய 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வீடுகளில் தங்களை தாங்களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் கொரோனா பாதித்த 14 பேரில், 12 பேர் குணமடைந்து உள்ளனர். 2 பேர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வருகிறவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 200 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2,750 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 14 பேரை தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story