விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
மது விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதுப்பிரியர்களின் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 40 கடைகள் செயல்பட்டு வந்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மீதமுள்ள 84 மதுக்கடைகளும் சுப்ரீம் கோர்ட்டு அணுமதியின் பேரில் கடந்த 16-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 102 டாஸ்மாக் கடைகளில் நோய் பாதிப்பு இல்லாத பகுதியில் உள்ள 75 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. கடைகளில் மது வாங்க வரும் மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புக்கட்டைகளால் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான வகைகளை வாங்கி சென்றனர்.
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 16, 17-ந் தேதிகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் கூடுதலாக 2 மணி நேரம் திறந்து இருக்கும் என்று நேற்று முன்தினம் அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மூடப்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினத்தில் இருந்து இரவு 7 மணி வரை திறந்து வைக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது.
மது விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்க வருபவர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக விழுப்புரம் ஜானகிபுரத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த 16, 17-ந் தேதிகளில் திருவிழா கூட்டம்போன்று மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதிய நிலையில் தற்போது மதுப்பிரியர்களின் கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளும் மதியத்திற்கு பின்பு வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறுகையில், 2 நாட்களாக தினமும் 500 டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்து வந்தோம். பெரும்பாலானோர் மதுபானங்களை வாங்கி விட்டனர். இதனால் மதுபானங்கள் வாங்க வரும் மதுப்பிரியர்களின் கூட்டம் குறைந்துள்ளது என்றனர்.
Related Tags :
Next Story