நெல்லை டவுனில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்
தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பேட்டை,
நெல்லை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக குழாய்களை பூமிக்கு அடியில் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக பேட்டையில் உள்ள பிரதான சேரன்மாதேவி ரோட்டின் நடுவே குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக பல மாதங்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. இந்த பணி கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் அருகில் இருந்து கம்பாநதி காமாட்சி அம்மன் கோவில் வழியாக வழுக்கோடை மற்றும் டவுன் பகுதிக்கு குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று கோவிலின் மேற்கு பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டி உடனுக்குடன் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதி ரோடு மூடப்பட்டு இருந்தது. ஆனாலும் குறுகிய பாதை வழியாக மோட்டார் சைக்கிள்கள் சென்று வந்தன. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில ஆட்டோ, கார்களும் அந்த வழியாக செல்ல முயற்சி செய்தன.
இதனால் நேற்று காலையில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இவ்வாறு அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை வேகப்படுத்தி, விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story