373 பள்ளிகளை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணி தீவிரம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 373 பள்ளிகளை தூய்மைப்படுத்தி தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மற்றும் மார்ச் 26-ந் தேதி நடைபெற இருந்த பிளஸ்-1 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல் மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற பிளஸ்-2 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடத்தேர்வுகளை பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக எழுத இயலாத தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. அதோடு தேர்வுகளை அடுத்த மாதம்(ஜூன்) நடத்த கால அட்டவணையும் தயார் செய்து வெளியிட்டது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உடனடியாக சென்று மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக பள்ளி தேர்வு மையங்களை தூய்மைப்படுத்தி கிருமி நாசினி திரவம் தெளித்து தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று துப்புரவு ஊழியர்கள் மூலமாக பள்ளி வளாகம், தேர்வு அறைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி திரவம் தெளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 100 மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக அவர்கள் படித்து வந்த அனைத்து பள்ளிகளுமே தற்காலிகமாக பொதுத்தேர்வு மையங்களாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 373 பள்ளிகளையும் பொதுத்தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் படித்து வந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். மற்ற இடங்களில் உள்ள தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினியால் கழுவ ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்படும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்து படித்து வரும் நிலையில் அவர்கள் தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்கு சென்றிருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து தேர்வு எழுத வசதியாக இ-பாஸ் பெற்றுத்தர கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெகு தொலைவில் இருந்து பஸ்கள் மூலமாக மட்டுமே தேர்வு மையத்திற்கு வர முடியும் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள், தேர்வு மையத்திற்கு வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை பொது தேர்வு மையத்தில் மற்ற மாணவர்களுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. அதற்கு மாற்றாக அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளிகள் தனித்தேர்வு மையமாக அமைக்கப்படும்.
தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வருவதை உறுதி செய்திடும் பொருட்டு 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட்டு அந்த ஆசிரியர் மூலமாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு தேர்வு மையத்திற்கு வர முறையான தகவல் தெரிவிக்கப்படும். மேலும் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வீட்டில் இருந்தே தயார்படுத்த ஏதுவாக கல்வி தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story