மாநில எல்லைகளில் ஆய்வு: இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் அனுமதிக்கக்கூடாது அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு


மாநில எல்லைகளில் ஆய்வு:  இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் அனுமதிக்கக்கூடாது   அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2020 3:45 AM GMT (Updated: 20 May 2020 3:45 AM GMT)

மாநில எல்லைகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். அப்போது இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூடலூர்,

ஊரடங்குக்கு மத்தியில் இ-பாஸ் பெற்று வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அனுமதியின்றி கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் சரக்கு லாரிகளில் பதுங்கியவாறு செல்கின்றனர். இதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் ஆய்வு நடத்தினார். கூடலூர்- கேரள எல்லையான நாடுகாணியில் உள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த பிறகு அதிகாரிகளிடம் கலெக்டர் கூறியதாவது:-

முகக்கவசம் அணிய வேண்டும்

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வாகன டிரைவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே கூடலூருக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும். இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அங்குள்ள பேக்கரி, டீக்கடையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது டீக்கடை நடத்தி வந்த ஒரு பெண்ணிடம், வாடிக்கையாளர்கள் டீ கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அந்த பெண், பார்சல் டீ மட்டுமே வழங்குவோம் என்று கூறுவேன் என்று விளக்கம் அளித்தார்.

நிவாரண பொருட்கள்

பின்னர் கூடலூர் நகர பகுதியில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் கூடலூர்- கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். அப்போது அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன் உள்பட அலுவலர்கள், வருவாய் துறையினர் உடன் இருந்தனர். முன்னதாக தேவர்சோலை பேரூராட்சி கவுன்டங்கொல்லி ஆதிவாசி காலனிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சென்று, அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள 120 ஆதிவாசி குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபாலன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story