தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது


தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2020 9:25 AM IST (Updated: 20 May 2020 9:25 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, 

தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கத்திக்குத்து

திருச்சி காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கிலி(வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை காஜாப்பேட்டை பொதுக்கழிப்பிடம் அருகே வந்தபோது, அங்கு வந்த 2 பேர் அவரிடம் தகராறு செய்ததுடன், திடீரென கத்தியை எடுத்து சங்கிலியின் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் குடல் சரிந்து மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தகவல்அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கிலியும், அதே பகுதியை சேர்ந்த முஸ்தபாவும் மணல்வாரித்துறை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்தார்களாம். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் முஸ்தபா தனது நண்பர் காஜாவுடன் சென்று சங்கிலியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

* திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் அலெக்ஸ்(38). இவர், அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் (மெக்கானிக்) கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் அருகே மது குடித்துக் கொண்டு இருந்தவர்களை அலெக்ஸ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பீர்பாட்டிலால் அலெக்சை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் அலெக்ஸ் கொடுத்த புகாரின்பேரில், 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களில் பெரியமிளகுபாறையை சேர்ந்த தினேசை(20) கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகிறார்கள்.

ஐ.டி.பெண் ஊழியரிடம் சில்மிஷம்

* திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருச்சி வந்துள்ள அவர், சம்பவத்தன்று வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கி கொண்டு இருந்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் மாடசாமி, அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆட்டோ டிரைவரை பிடித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.

* திருச்சி கே.கே.நகர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் நிஷாந்த்(வயது 19). இவர் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவரிடம் நேற்று மதியம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நிஷாந்த்தை கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது

* திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் பீர்முகமது(32). கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே வசித்து வருபவர் அபி என்கிற அருள்பிரதாப் ராஜ்(28). இவருக்கும், இவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை பீர்முகமது தடுக்க சென்றபோது, அபியுடன் மோதல் ஏற்பட்டது. உடனே அபி, அவரது நண்பர்கள் செந்தில்முருகன், நடராஜன் ஆகியோர் அரிவாளால் பீர்முகமதுவையும், அவரது மைத்துனர் ஜக்கரியாவையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்முருகன், அபி ஆகியோரை கைது செய்தனர்.

* பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி காந்தி நகரை சேர்ந்த ராஜகோபால் மகன் தீனா (29) என்பவர், தனது வீட்டில் போட்டிருந்த சாராய ஊறலை பெட்டவாய்த்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, அழித்ததுடன் தீனாவை கைது செய்தார்.

கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

* திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. ரவுண்டானாவை கடந்து ஜங்ஷன் நோக்கி சென்றபோது அங்குள்ள தடுப்பு கட்டையில் திடீரென கார் மோதியது. இதில் அந்த கார் 2 முறை கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார். மீன் வியாபாரியான இவரிடம், நேற்று மாலை சத்தியகிரி (30), சுரேஷ் (25), சிவகுமார் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

* சோமரசம்பேட்டை அருகே உள்ள சாந்தபுரம் ஆர்.எஸ்.எஸ். காலனியில் ஆரோக்கியசாமி (25) என்பவர் தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு செந்தில்குமார் சிறுநீர் கழிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஆரோக்கியசாமி மற்றும் அவரது தந்தை ஆசீர்வாதம் ஆகியோர் தட்டிக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் செந்தில்குமாருக்கு இடது கழுத்து பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

103 பேர் மீது வழக்கு

* திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தெருக்களில் சுற்றியதாக 103 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 357 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை 12,086 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் நேற்று முசிறி, துவரங்குறிச்சி, பெட்டவாய்த்தலை, கல்லக்குடி, திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர மதுவேட்டையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராய ஊறலும், 34 டாஸ்மாக் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

*திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 25 பேர் மீதும், இதேபோல் முடித்திருத்தும் தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் 100 பேர் மீதும், கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 150 பேர் மீதும் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story