கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
மேலூர் அருகே கள்ளக்காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்,
மேலூர் அருகே கடந்த 17-ம் தேதி காலையில் திருவாதவூர் பெரிய கண்மாய் மடை பகுதியில் ஆண் மற்றும் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக மேலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் மேலூர் தெற்குதெருவை சேர்ந்த விமல் மனைவி ஆயம்மாள், அதே ஊரை சேர்ந்த அன்புநாதன் என போலீசாருக்கு தெரியவந்தது.
மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சண்முகபாண்டியன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அன்புநாதனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவருடன் கடைசியாக பேசியவர்களையும், அவ்வாறு பேசியவர்கள் பிறருடன் தொடர்பு கொண்ட விவரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையான ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன்(வயது 30), தெற்குதெரு கிராமத்தை சேர்ந்த சதீஷ்(25), ராஜா(30) மற்றும் ஆயம்மாளின் கணவன் விமல் ஆகிய 4 பேர் இந்த இரட்டை கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன், சதீஷ், ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு தாயான ஆயம்மாள் அவரது கணவர் விமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன், மேலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். அவர் நடத்திய டீக்கடையில் அன்புநாதன் வேலைபார்த்து வந்துள்ளார்.
தெற்குதெரு அருகே உள்ள டி.வெள்ளாலபட்டியில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் தற்காலிக ஆசிரியையாக ஆயம்மாள் வேலைபார்த்து வந்துள்ளார். அந்த பள்ளிக்கு வேலைக்கு செல்ல அன்புநாதன் மோட்டார் சைக்கிளில் ஆயம்மாளை அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது அன்புநாதனுக்கும், ஆயம்மாளுக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை கண்டித்தும் கள்ளக்காதல் தொடரவே அவர்கள் 2 பேரையும் தமிழ்மாறன் உள்பட 3 பேரும் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் விமல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story