ஊரடங்கினால் தாய் வீடாக மாறியது: மொபட்டில் கூடு கட்டி குஞ்சு பொரித்த விசிறிவால் குருவி


ஊரடங்கினால் தாய் வீடாக மாறியது:   மொபட்டில் கூடு கட்டி குஞ்சு பொரித்த விசிறிவால் குருவி
x
தினத்தந்தி 20 May 2020 10:18 AM IST (Updated: 20 May 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் ஒரே இடத்தில் நிறுத்தி இருந்த மொபட்டானது, விசிறி வால் குருவிக்கு தாய் வீடாக மாறி உள்ளது. அந்த மொபட்டில் அந்த குருவி கூடு கட்டி குஞ்சு பொரித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மதுரை, 

ஊரடங்கு அமலுக்கு வந்ததும் மதுரை புதூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது வீட்டில் மொபட்டை எடுக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி இருந்தனர். அப்போது கருப்பு நிறம் கொண்ட விசிறி வால் குருவி ஒன்று அவரது வீட்டுக்குள் வரத்தொடங்கியது. அந்த வீட்டில் உள்ளவர்கள் அந்த குருவியின் வருகையை எதிர்பார்த்து உணவு வைத்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அந்த குருவி, அந்த மொபட்டில் கூடு கட்டத்தொடங்கியது. இதை பார்த்த அந்த குடும்பத்தினர் குருவியை தொந்தரவு செய்யவில்லை.

2 முட்டையிட்டது

கூடு கட்டியதும் அந்த குருவி இரண்டு முட்டைகளை இட்டது. இரை தேடிச்சென்ற நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குருவி முட்டைகளை அடைகாத்தது. அதன் நடவடிக்கையை அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண்காணித்து வந்தனர்.

சில நாட்களில் முட்டையில் இருந்து முதல் குஞ்சு வெளிவந்தது. இதை பார்த்த தாய் குருவி மட்டுமல்ல, அந்த வீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர். 2 நாட்கள் கழித்து மற்றொரு முட்டையில் இருந்தும் குஞ்சு வெளிவந்தது. இப்போது தாய் குருவிக்கும், அதன் குஞ்சுகளுக்கும் அந்த வீட்டினர் உணவு வைக்கின்றனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய ஊரடங்கினால் குருவியின் தாய் வீடாக அந்த மொபட் மாறி உள்ளது.

இது குறித்து அந்த வீட்டைச் சேர்ந்த சிறுவன் தியானேஷ்வரன் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து நாங்கள் பறவைகளுக்கு உணவு வைத்தோம். அப்போதுதான் இந்த விசிறிவால் குருவியும் வரத் தொடங்கியது. அது கருப்பாக பார்க்க அழகாக இருந்தது. அது எனது தாயாரின் மொபட்டை சுற்றி சுற்றி வந்தது. நாளடைவில் அதில் கூடு கட்டி கொண்டிருப்பதை கண்டேன். உடனே வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்து அந்த மொபட்டை எடுக்கக்கூடாது என்று கூறினேன். வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

சில நாட்கள் கழித்து அந்த குருவி சிறிய அளவில் 2 முட்டைகளை இட்டது. உடனே அந்த முட்டைகளை செல்போனில் படம் எடுத்து நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தோம். அதை பார்த்த பலர், விசிறி வால் குருவி தற்போது அரிதாகி வரும் பறவையினம் என்று தெரிவித்தனர். இதனால் அந்த குருவி மீது பாசம் அதிகரித்தது. அந்த முட்டையில் இருந்து எப்போது குஞ்சு வரும் என்று காத்திருந்தோம். தினமும் அதன் நடவடிக்கையை கவனித்த போது திடீரென்று ஒருநாள் ஒரு முட்டை உடைந்து கருப்பாக குஞ்சு குருவி இருப்பதை பார்த்தேன். முட்டையில் இருந்து அடுத்தடுத்து குஞ்சு வெளிவந்ததை தொடர்ந்து தாய் குருவி அந்த இடத்திலேயே சுற்றி வந்தது. தற்போது அந்த 2 குஞ்சுகளும் நன்கு வளர்ந்து வருகிறது. விசிறிவால் குருவியால் எனது தாயாரின் மொபட்டுக்கு சுமார் 50 நாட்களாக ‘லாக்டவுன்’ தான்.

இவ்வாறு தியானேஷ்வரன் தெரிவித்தான்.

நேசியுங்கள்

மனிதன் செயற்கை மீது பற்று கொண்டு இயற்கையை மறந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறான். ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் இப்போது மனிதர்களை இயற்கையின் பக்கம் திருப்பி வருகிறது. முடங்கி கிடக்கும் மனிதர்களை நோக்கி மற்ற உயிரினங்களும் வருகின்றன. அவர்களை இந்த குடும்பத்தினர் போன்று நேசிக்க கற்றுக்கொண்டால், எல்லோரும் மற்ற உயிரினங்களோடு நெருங்கி வாழலாம் என்பதே உண்மை.

Next Story