மராட்டிய மாநிலத்தில் இருந்து 494 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்த 494 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் 12 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி,
மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்த 494 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் 12 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரெயிலில் வந்த தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் 24 மாவட்டங்களை சேர்ந்த 494 பேர் புனே ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை சிறப்பு ரெயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தனர். இவர்கள் அனைவரையும் சமூக இடைவெளியை கடைபிடித்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க 12 சிறப்பு பஸ்கள் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. மாவட்ட கலெக்டர் சிவராசு ரெயிலில் வந்த தொழிலாளர்களை பஸ்களில் ஏற்றி அவரவர் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
ரெயிலில் வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-
அரியலூர்- 8, கோவை-16, திண்டுக்கல்-39, ஈரோடு-44, கரூர்-25, மதுரை-17, நாகப்பட்டினம்-25, நாமக்கல்-9, நீலகிரி-7, பெரம்பலூர்-15, புதுக்கோட்டை-80, சிவகங்கை-30, தஞ்சை-29, தேனி-26, திருச்சி-25, திருப்பூர்-17, திருவாரூர்-62, சேலம்-8, தர்மபுரி-5, கிருஷ்ணகிரி-2, விழுப்புரம்-1, திருவண்ணாமலை-1, திருப்பத்தூர்-2 மற்றும் காரைக்காலை சேர்ந்த ஒருவரும் ரெயிலில் வந்தனர்.
இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் பஸ்சில் ஏற்றி, சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு இவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரெயிலில் வந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story