கரூரில் இருந்து ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
கரூரில் இருந்து, ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கரூர்,
கரூரில் இருந்து, ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களில், சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 14 மாநிலங்களை சேர்ந்த 7,779 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2,802 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தினர்
இவர்களில் முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 254 பேரை, கடந்த 17-ந்தேதி திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்க, கரூரில் இருந்து பஸ்கள் மூலம் திருச்சி ரெயில் நிலையத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார். இதையடுத்து 2-ம் கட்டமாக நேற்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 35 பேர் கரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
பின்னர் அவர்களை பஸ்கள் மூலம் கோவை ரெயில் நிலையத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் தாசில்தார் அமுதா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அவர்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெங்கராஜன் சென்று, அவர்களை கோவை ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழியனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story