இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 52 இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 52 இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று மாநிலம் தழுவிய கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி விருதுநகரில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நகர செயலாளர் காதர் மொய்தீன் தலைமையில் சமூக இடைவெளியுடன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், தாலுகா செயலர் கக்கனன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 750 பேர் கலந்துகொண்டனர்.
சேத்தூர்
சேத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தலைமையிலும், செட்டியார்பட்டி கட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி தலைமையிலும், முகவூர் காமராஜர் நகரில் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் பகத்சிங் தலைமையிலும், தேவதானத்தில் ஒன்றிய துணை செயலாளர் கணேசமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து சேத்தூர் பகுதியில் வருவாய் ஆய்வாளரிடமும், செட்டியார்பட்டி, முகவூர் காமராஜர் நகர், தேவதானம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவிலில் ஒன்றிய செயலாளர் வேதநாயகம் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மூர்த்தி தலைமையிலும், கோட்டைப்பட்டியில் நடராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சம்தவிழ்த்தானில் கணேசன், ராமலிங்காபுரத்தில் வெங்கிடசாமி, மம்சாபுரத்தில் ராஜேந்திரசோழன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
Related Tags :
Next Story