திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
கறம்பக்குடி,
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
சுகந்த பரிமளேஸ்வரர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ளதிருமணஞ் சேரியில் பிரசித்தி பெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் தோஷநிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு காரியம் கைகூடும், நோய் அகலும் என்பது ஐதீகம். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வர்.
பாரம்பரிய பெருமைமிக்க இந்த கோவிலில் தமிழ்புத்தாண்டு தொடங்கி வைகாசி விசாகம் வரை உற்சவ தினங்களாகும். இந்நாட்களில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு உற்சவ மூர்த்திகளின் வீதி உலா போன்றவை நடைபெறும். இறுதி திருவிழா வைகாசி விசாகத்தன்று நடைபெறும். அன்று மாலை தேரோட்டம் நடக்கும். இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
இந்நிலையில் கொரோனா வைரசின் கொடூர தாக்குதலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணஞ்சேரி கோவில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெறவில்லை. தொடர் உற்சவ விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 4-ந்தேதி வைகாசி விசாகம் வருகிறது. எனவே அன்றைய தினம் வழக்கம்போல் தேரோட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஏராளமானோர் கூடும் தேரோட்டத்திற்கு அனுமதி கிடைக்காது என்றே கோவில் நிர்வாகத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே வேளையில் மே 31-ந்தேதியுடன் ஊரடங்கு நீக்கப்பட்டால் உள்ளூர் மக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். சமூக இடைவெளியுடன் குறைவான பக்தர்களை அனுமதித்து தேரோட்டம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் உள்ளது.
Related Tags :
Next Story