ஈரோட்டில் சீருடைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கின


ஈரோட்டில் சீருடைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 20 May 2020 12:09 PM IST (Updated: 20 May 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிக்கூடங்கள் அனைத்தும் கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்டு இருந்தன.

ஈரோடு, 

தற்போது ஊரடங்கில் தறிக்கூடங்கள் இயங்க விதிமுறையில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் விசைத்தறிக்கூடங்களை இயக்கத்தொடங்கி உள்ளனர். நேற்று வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள சில விசைத்தறிக்கூடங்கள் இயங்கின.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கந்தவேலு கூறியதாவது:-

விசைத்தறிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் ஈரோட்டில் முழுமையாக விசைத்தறிகள் இயங்க முடியாத நிலையில் உள்ளது. தற்போது தமிழக அரசின் இலவச சீருடை திட்டத்தில் துணிகள் உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்க விசைத்தறிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தமாக கணக்கிட்டால் 1,000 முதல் 2 ஆயிரம் தறிகள் மட்டுமே இயங்குகின்றன. வழக்கமாக 24 மணி நேரம் இயக்கப்படும் தறிகள் 10 மணி நேரம் மட்டுமே இயக்கப்பட உள்ளன.

தனியார் ஆர்டர்கள் எதுவும் உற்பத்தி தொடங்கவில்லை. வெளியூர் தொழிலாளர்கள் யாரும் வர முடியாத நிலையில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தொழிலாளர்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே உற்பத்தியை சரியாக செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ரேயான் துணிகள் சுமார் 1 கோடி மீட்டர் அளவுக்கு தேங்கிக்கிடக்கின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடியாகும். குஜராத், மராட்டியம், புதுடெல்லி மார்க்கெட்டுகள் இயங்க தொடங்கினால் மட்டுமே இங்கிருந்து துணிகள் அனுப்பி வைக்க முடியும். அதுவரை இங்கு உற்பத்தி என்பது முடியாது. மேலும் ரேயான் துணிகளுக்கான செயற்கை இழை நூல்கள் வரத்து இல்லை.

ஈரோட்டில் சாய-சலவை ஆலைகள் முறையாக செயல்பட தொடங்காததால் பருத்தி நூலும் கிடைக்காது. எனவே தற்போது விசைத்தறி இயக்குவது என்பது பெயரளவுக்குத்தான். உற்பத்தி எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story