பத்ரா மேல் அணை திட்டம் மூலம் சித்ரதுர்காவில் 125 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி


பத்ரா மேல் அணை திட்டம் மூலம் சித்ரதுர்காவில் 125 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2020 4:15 AM IST (Updated: 21 May 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

பத்ரா மேல் அணை திட்டம் மூலம் சித்ரதுர்காவில் 125 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

பெங்களூரு,

நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“மைசூரு மன்னர் ஆட்சி காலத்தில் இரியூர் தாலுகா வாணிவிலாசபுரா கிராமம் அருகே வேதவதி ஆற்றின் குறுக்கே 30 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு வாணிவிலாஸ் அணையை கட்ட கடந்த 1902-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1907-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை முடித்து, நீர் திறக்கப்பட்டது.

அப்போது அந்த அணை மூலம் 12 ஆயிரத்து 135 எக்டேர் நிலப்பரப்புக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த அணை மூலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர், சல்லகெரே ஆகிய ஊர்களுக்கும் டி.ஆர்.டி.ஒ., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஆர்.பி., பி.ஏ.ஆர்.சி. போன்ற அமைப்புகளுக்கும் மற்றும் 18 வழியோர கிராமங்களுக்கும் குடிநீருக்காக தண்ணீர் ஒதுக்கப்பட்டது.

அந்த அணை ஒரு முறை மட்டும் அதாவது 1938-ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதாவது 30 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. மழை பற்றாக்குறை காரணமாக அந்த அணைக்கு நீர்வரத்து என்பது வெகுவாக குறைந்துவிட்டது. 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே அணையில் இருக்கிறது. பத்ரா மேல் அணை திட்டத்தின் கீழ் 2 டி.எம்.சி. நீரை அந்த அணைக்கு கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு 3.33 டி.எம்.சி. நீர் இந்த அணைக்கு கொண்டு வரப்பட்டது. குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததால் சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு மழை பெய்ததால் அந்த அணைக்கு 7.24 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. தற்போது வாணிவிலாஸ் அணையில் 10.57 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருக்கிறது.

குடிநீர் தேவைக்கு போக கூடுதலாக 5 டி.எம்.சி. நீர் உள்ளது. அந்த நீரை சித்ரதுர்கா மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களுக்கு குடிநீர் வழங்கவும், சிறிய தடுப்பணைகளை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டு, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மத்திய கர்நாடகத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய பத்ரா மேல் அணை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சித்ரதுர்காவில் 125 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

Next Story