ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மந்திரி சி.டி.ரவி பேட்டி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மந்திரி சி.டி.ரவி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2020 4:30 AM IST (Updated: 21 May 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மந்திரி சி.டி.ரவி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விளையாட்டுகளுக்கு தடை இருந்தது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடத்தை தவிர மற்ற விளையாட்டுகளை விளையாட அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால் கபடி விளையாட்டுக்கு அனுமதி இல்லை. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி விளையாட்டுகளை விளையாட வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்த வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் வீரர்களின் உடல் வெப்பநிலையை ஆய்வு செய்ய வேண்டும். கைகளை துடைத்துக்கொள்ள டிசு பேப்பர் வைத்திருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் விளையாட்டுகளை விளையாடலாம்.

கிளப்புகளில் சமூக விலகலை பின்பற்றி விளையாடலாம். வருகிற 31-ந் தேதி வரை கபடி, குஸ்தி போட்டிகளுக்கும், நீச்சல் பயிற்சிக்கும் அனுமதி இல்லை. மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

வக்பு வாரிய நிதியை அரசு நிவாரண பணிகளுக்கு எடுக்கக்கூடாது என்று ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அவர் கூறியுள்ள கருத்து அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மனிதநேயத்திற்கு எதிராக அவர் கருத்து கூறியுள்ளார். இது ஜமீர்அகமதுகான் கருத்தோ அல்லது காங்கிரஸ் கருத்தோ தெரியவில்லை. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

வக்பு வாரியம், அரசை விட பெரியது அல்ல. வக்பு வாரியத்திற்கு மக்களின் பணம் வழங்கப்படுகிறது. ஜமீர்அகமதுகான் போன்றவர்கள் இன்னும் ஜின்னா மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. வக்பு வாரிய பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஜமீர்அகமதுகானிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 16 மாநிலங்களில் அத்தகைய சட்டம் அமல்படுத்தப்பட்டது. எதிர்க்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பது சரியல்ல. அதிகளவில் சந்தைகளை அமைத்தால், அதன் மூலம் விவசாயிகளுக்கு தான் பயன். இதை காங்கிரசார் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு மந்திரி சி.டி.ரவி கூறினார்.

Next Story