“நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம்” கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


“நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம்” கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 May 2020 5:45 AM IST (Updated: 21 May 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கொரோனா அறிகுறி பரிசோதனை செய்யும் வகையில், ‘நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை’ சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை, 

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் பி.ஆர்.என். தோட்டப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் நவீன ரோபோ ஆட்டோவையும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ‘நம்ம சென்னை கொரோனா தடுப்புத்திட்டத்தையும்’ சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நுண்அளவில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவத்துறை பரிந்துரைத்துள்ள கபசுர குடிநீர், இந்திய மருத்துவத்துறை அறிவுறுத்தலின்படி ஊட்டச்சத்து மாத்திரைகள் நாள்தோறும் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 5 லட்சத்து 20 ஆயிரம் கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சென்னையில் உள்ள குடிசைவாழ் பகுதிகளில் 26 லட்சம் மக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் ஒருவருக்கு 3 என விலையில்லாமல் மறுபயன்பாட்டுடன் கூடிய முககவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அப்போது பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வைரஸ் தொற்று இருப்பின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள். சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், வடக்கு வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ் மற்றும் மண்டல அலுவலர், செயற்பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story