திருப்பத்தூரில் இருந்து 307 தொழிலாளர்கள் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பஸ்சில் புறப்பட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி வழியனுப்பினார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 307 கூலித்தொழிலாளர்கள் உத்தர பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழியனுப்பினார்.
திருப்பத்தூர்,
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்து தங்கி வேலை பார்த்த கூலித்தொழிலாளர்கள் 307 பேர் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளிடம் மனு கொடுத்தனர். அவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 7 பஸ்களில் 307 கூலித்தொழிலாளர்களை ஏற்றி உத்தர பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று, கொடியசைத்து 307 கூலித்தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தார்.
அதில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி.ரமேஷ், ராஜா ராணி தாமோதரன், நாகேந்திரன், உதவி கலெக்டர்கள் வில்சன் ராஜசேகர், அப்துல்முனிர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கே.மோகனசுந்தரம், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 34 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மேல்விஷாரம் முன்னாள் நகர சபை துணைத்தலைவர் இப்ராகிம் கலிலுல்லா ஆகியோர் பங்கேற்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 34 தொழிலாளர்களை பஸ் மூலம் அரக்கோணத்துக்கு வழியனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கிருந்து ரெயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு செல்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த 250 பேர் வேலை பார்த்து வந்தனர். அதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 82 தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்கள், பஸ்களில் ஆம்பூரில் இருந்து அரக்கோணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து சொந்த மாநிலத்துக்கு செல்கிறார்கள். அவர்களை தாசில்தார் செண்பகவல்லி, மண்டல துணைத் தாசில்தார் பாரதி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story