திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டுனர்கள் நிதி உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தனர்.
திருப்பூர்,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதனால் பல்வேறு தொழில்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் வாகனங்களை இயக்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடு இருப்பதால் வாடகைக்கு வாகனங்களை ஓட்டி வரும் அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் வருமானம் இன்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு மாவட்ட எல்லைக்குள் அத்தியாவசிய பணிகளுக்கு வாடகை வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இருந்தாலும் பொதுவான பணிகளுக்கு வாகனங்களை இயக்குவதற்கு தடை இருப்பதால் கார், ஆட்டோ, உள்ளிட்ட பல்வேறு வகை வாகன ஓட்டுனர்கள் சவாரி இன்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேசன் சார்பில் திருப்பூர் கிளை தலைவர் கணேஷ்குமார், செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் சங்கத்தை சேர்ந்த பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுகாலை மனு கொடுக்க வந்திருந்தனர்.
நிதி உதவி வேண்டும்
அவர்கள் கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அப்போது அவர்கள் தங்கள் சங்கத்தை சேர்ந்த 1400க்கும் மேற்பட்டோர் வருமானமின்றி தவித்து வருவதாகவும், தமிழக அரசு சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவி கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், மூலனூர், உடுமலை, காங்கேயம் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.
Related Tags :
Next Story