வெறிச்சோடி கிடக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகம்: வருமானமின்றி தவிக்கும் பூ-வளையல் வியாபாரிகள்


வெறிச்சோடி கிடக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகம்: வருமானமின்றி தவிக்கும் பூ-வளையல் வியாபாரிகள்
x
தினத்தந்தி 21 May 2020 4:21 AM IST (Updated: 21 May 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகம் வெறிச்சோடி கிடப்பதால் பூ-வளையல் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.

சாலியமங்கலம், 

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகம் வெறிச்சோடி கிடப்பதால் பூ-வளையல் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.

பக்தர்களுக்கு தடை

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா நோய் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தைலகாப்பு அபிஷேகம் தற்போது கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காட்சி அளிப்பது கோவில் வளாகத்தில் பூ, வளையல், பொம்மை, சாமி புகைப்பட கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளை வேதனை அடைய செய்துள்ளது.

வருமானம் இல்லை

கோவில் முன்பு தரைக்கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வரும் பெண்கள் தினமும் நம்பிக்கையுடன் கடை திறந்து காத்திருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வராததால் பூ வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என அவர்கள் கவலையுடன் கூறுகிறார்கள். ஊரடங்கு நடைமுறைகளில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் பல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இதனால் கோவில் முன்பு கடை வைத்துள்ள வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். கொரோனா ஆபத்து நீங்கி ஊரடங்கு எப்போது முடியும்? என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story