புதுவையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன; தனியார் பஸ்கள் ஓடவில்லை


புதுவையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன; தனியார் பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 May 2020 11:19 PM GMT (Updated: 20 May 2020 11:19 PM GMT)

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 4-ம் கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை அமைச்சரவை கூட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடைகள், ஓட்டல்கள் திறப்பு நேரம் இரவு 7மணி வரை நீட்டிக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்படும். மாநிலத்துக்குள் இயங்கும் வகையில் பஸ்கள் ஓடும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி முதல்கட்டமாக நேற்று முதல் உள்ளூர் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரி-கோரிமேடு, ரெயில் நிலையம்- கோரிமேடு, புதுச்சேரி- நல்லவாடு, புதுச்சேரி- தவளக்குப்பம், டி.என்.பாளையம்- வில்லியனூர்- புதுச்சேரி- முருங்கப்பாக்கம், வில்லியனூர்- பத்துக்கண்ணு- புதுச்சேரி உள்ளிட்ட வழித் தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

புதிய பஸ் நிலையம் எதிரே மறைமலை அடிகள் சாலையில் 8 பி.ஆர்.டி.சி. பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்பட்டனர். பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்த பிறகே பஸ்களில் உட்கார வைக்கப்பட்டனர். சுமார் 54 நாட்களுக்கு பிறகு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பஸ்களில் ஏறினர். அவர்களுக்கு பி.ஆர்.டி.சி. அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர். புதுச்சேரியில் இருந்து கோரிமேடுக்கு முதல் டவுன் பஸ் விடப்பட்டது.

அதையடுத்து நல்லவாடு, கொம்பாக்கம், கீழ் அக்ரஹாரம், வில்லியனூர், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. டிரைவர், கண்டக்டர்கள் முக கசவம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளை அவர்கள் அறிவுறுத்தியபடி இருந்தனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே அதிகம் இயக்கப்படுகின்றன. ஊரடங்கையொட்டி இந்த பஸ்களை இயக்க அரசு அனுமதிக்கவில்லை. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு அந்த பகுதிக்கு சென்று வரும் வகையில் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு அனுமதித்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையில் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும் என முடிவு செய்துள்ளதால் இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் நாளான நேற்று காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ள போதிலும் டிரைவர், கண்டக்டர்கள் வராததால் பஸ்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இன்று (வியாழக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆனால் காரைக்காலில் நேற்று உள்ளூர் பஸ்கள் ஓடின.

Next Story