மதுக்கடைகள் திறக்கப்படாததால் மதுபிரியர்கள் தமிழகத்தில் தஞ்சம்
புதுவையில் நேற்றும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மதுப்பிரியர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
புதுச்சேரி,
கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்திய கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மதுக்கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து கவர்னர் உத்தரவின்பேரில் மதுக்கடைகளில் இருப்பு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு குறைவாக இருந்த 100 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுவை அரசு மதுக்கடைகளை கடந்த 19-ந் தேதி திறப்பதாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் 20-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது. இதுதொடர்பாக கோப்புகளை தயாரித்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகள் திறக்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காத காரணத்தால் மதுக்கடைகள் நேற்றும் திறக்கப்படவில்லை.
நேற்று காலை முதல் மது பிரியர்கள் மதுக்கடைகளின் முன்பு குவிந்தனர் நேற்றும் மதுக்கடைகள் திறக்காததால் ஆத்திரமடைந்த சிலர் திட்டி தீர்த்தனர் சிலர் தங்களுக்குள்ளே புலம்பியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மேலும் சிலர் மதுக் கடைகள் திறக்காத ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு தஞ்சமடைந்தனர்.
Related Tags :
Next Story