அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி-டிராக்டர், மாட்டுவண்டிகள் பறிமுதல் 4 பேர் கைது


அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி-டிராக்டர், மாட்டுவண்டிகள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2020 5:06 AM IST (Updated: 21 May 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்சோதி மற்றும் போலீசார் முகந்தனூர் அருகே சத்தியவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லோடு வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றி வந்த சந்தனவிக்னேசை (வயது 23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை பகுதியில் தஞ்சை மெயின்ரோட்டில் நேற்று அதிகாலை மன்னார்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வலங்கைமான் அருகே உள்ள ராஜேந்திரநல்லூரை சேர்ந்த இளையராஜா (35) என்பவரை கைது செய்தனர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே உப்பூர் கோரையாற்றில் மணல் அள்ளுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மதியழகன் (40) என்பதும், இவர் அனுமதியின்றி கோரையாற்றில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் முத்துப்பேட்டை அருகே மங்களூர் பாமினி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளிய சுரேஷ் (35) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story