ஊட்டியில் சூறாவளி காற்று: சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியில் வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இந்த நிலையில் ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. அப்போது ஊட்டி புனித தாமஸ் ஆலய வளாகத்தில் இருந்த மரம் ஒன்று, ஊட்டி-இத்தலார் சாலையில் வேரோடு சாய்ந்தது. மேலும் மின்ஒயர்கள் அறுந்து விழுந்ததோடு, மின்கம்பம் வளைந்தது.
அப்போது அந்த வழியாக குழந்தைகளுடன் 4 பேர் நடந்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு அருகில் மரம் விழுந்ததால், மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நஞ்சநாடு, இத்தலார், எம்பாலாடா, பெர்ன்ஹில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பின்னர் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
அபாயகரமான மரங்கள்
இதுகுறித்து தகவல் ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, மரம் விழுந்து சேதமடைந்த மின்கம்பத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை ஊழியர்கள் சரி செய்தனர். மழைக்காலம் தொடங்கி விட்டதால், சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story