வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்குள் வரும்போது மாவட்ட எல்லையில் 24 மணி நேரம் தனிமைப்படுத்தப்படும் லாரி டிரைவர்கள் உணவுக்கு அதிகாரிகள் ஏற்பாடு
வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்குள் வரும்போது, மாவட்ட எல்லையில் 24 மணி நேரம் லாரி டிரைவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர்.
ஊட்டி,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 பேரில், 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் லாரி டிரைவர்கள், இ-பாஸ் பெற்று வரும் பொதுமக்கள் சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி, குன்னூரில் இருந்து மலைக்காய்கறிகள் மற்றும் தேயிலைத்தூள் வெளியிடங்களுக்கு லாரிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் லாரிகள் அந்தந்த இடங்களில் கிடைக்கும் லோடுகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் நீலகிரிக்குள் வருகின்றன.
24 மணி நேரம்
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டு திரும்பும் லாரிகளை நிறுத்தி, அதன் டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் லாரிகள் நிறுத்தப்பட்டு, அதன் டிரைவர்கள், கிளனர்களிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் 24 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு, காட்டேரி பூங்கா அருகே லாரிகளுடன் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்குகின்றனர். சளி மாதிரி பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே லாரிகளுடன் அவர்கள் நீலகிரிக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story