வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் ஆத்திரம்: கணவரை கொன்று நாடகமாடிய காதல் மனைவி கைது தந்தை, அண்ணனும் சிக்கினர்


வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் ஆத்திரம்: கணவரை கொன்று நாடகமாடிய காதல் மனைவி கைது தந்தை, அண்ணனும் சிக்கினர்
x
தினத்தந்தி 21 May 2020 1:58 AM GMT (Updated: 21 May 2020 1:58 AM GMT)

வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் கணவரை தீர்த்துக்கட்டிய பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக அவருடைய தந்தை, அண்ணனும் சிக்கினர்.

கொல்லங்கோடு, 

வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் கணவரை தீர்த்துக்கட்டிய பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக அவருடைய தந்தை, அண்ணனும் சிக்கினர்.

காதல் திருமணம்

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் புனிததோமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோபாய் (வயது 66). இவருடைய மகள் ஜாப்லின் (30). பட்டதாரி பெண். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த கார்கி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஜாப்லின் தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி கார்கியை மணந்தார்.

பிறகு ஜாப்லின் 2 குழந்தைகளுக்கு தாயானார். இதற்கிடையே ஜாப்லினுக்கும், அவருடைய தந்தை ஜோபாயிக்கும் இடையே நீடித்த மனஸ்தாபம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஜாப்லின் குடும்பத்துடன் சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வந்து குடியேறினார். அதாவது, ஜோபாய் தன்னுடைய மகளுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். தான் வசித்த வீட்டின் சிறிது தொலைவில் அந்த வீடு அமைந்திருந்தது.

காயங்களுடன் ஆண் பிணம்

மேலும், மகளுக்கு தூத்தூர் கல்லூரி அருகில் சூப்பர் மார்க்கெட் நடத்த ஜோபாய் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிகிறது. சென்னையை விட்டு குமரி மாவட்டத்துக்கு வந்த பிறகு கார்கிக்கும், ஜாப்லினுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில், ஜாப்லின் வீட்டில் கதறி அழும் சத்தம் கேட்டது.

இதற்கிடையே அந்த வழியாக கொரோனா பணிக்காக சென்ற ஏழுதேசம் கிராம அலுவலர் சேம்ராஜ், சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு கார்கி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது, குடும்ப தகராறில் கார்கி தூக்கில் தொங்கி இறந்ததாகவும், அவரை கீழே இறக்கி போட்டதாகவும் ஜாப்லின் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் கார்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதே சமயத்தில், கார்கியின் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.

பின்னர் ஜாப்லின், ஜோபாய், அவரது மகன் ஜஸ்டஸ் (36) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கார்கியின் சாவில் நீடித்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன. தந்தை, அண்ணனுடன் சேர்ந்து கணவரையே ஜாப்லின் தீர்த்துக்கட்டியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-

வாக்குவாதம்

கார்கி எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பாராம். மேலும், செல்போன் மூலம் ஏராளமான பெண்களுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஜாப்லின், கார்கிக்கு இடையே தகராறு இருந்துள்ளது. இதற்கிடையே, சென்னைக்கு மீண்டும் சென்று விடலாம் என ஜாப்லினிடம், கார்கி வற்புறுத்தியுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு, கார்கி செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.

அந்த சமயத்தில், ஜாப்லின் அதனை பார்த்து விட்டார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் அவர்களுக்கிடையே கைகலப்பாக மாறியது. உங்களை காதலித்து திருமணம் செய்த என்னிடம், நேர்மையாக இருக்கவில்லையே என்று ஜாப்லின் கதறி அழுதார்.

தீர்த்துக் கட்டினர்

மேலும், தன்னுடைய தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோரையும் வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர், 3 பேரும் சேர்ந்து கார்கியிடம் இருந்த செல்போனை பிடுங்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கார்கியின் கை, கால்களை அவர்கள் கட்டி போட்டனர். ஆத்திரம் தீராததால், கட்டையாலும் தாக்கியதாக தெரிகிறது. செல்போனை பறித்த பிறகு, அதில் உள்ள பாஸ்வேர்டு என்னவென்று கேட்டும் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து ஜாப்லின் மட்டும் வீட்டுக்கு வந்தார். அங்கு கார்கி அசைவற்ற நிலையில் கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து முகத்தில் தண்ணீரை தெளித்து பார்த்த போதும், கார்கியிடம் இருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. இதனால் பயந்து போன அவர், தந்தை, அண்ணனை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தார். பதற்றத்துடன் வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பேரும் சேர்ந்து தாக்கியதில், கார்கி இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து கொலையை மறைக்க ஜாப்லின் உள்பட 3 பேரும் நாடகமாடினர். அதாவது, தூக்குப்போட்டு கார்கி இறந்து விட்டதாக கூறியது தெரியவந்தது. இந்த தகவலை அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாகவும் அளித்துள்ளனர்.

3 பேர் கைது

மேலும் இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கணவரை கொன்று நாடகமாடியதாக பட்டதாரி பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story