கொடைக்கானல் வனப்பகுதியில் பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் கஞ்சா செடிகள் அழிப்பு 2 பேர் கைது
கொடைக்கானல் வனப்பகுதியில் பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
கொடைக்கானல்,
தேனி மாவட்டம் காமக்காப்பட்டி சோதனை சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வலையபட்டியை சேர்ந்த பாண்டி (வயது 60), கீழ்புதூரை சேர்ந்த வீரமணி (45) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொடைக்கானல் வனக்கோட்டத்தில் உள்ள மோயர்பாயிண்ட் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.
அழிப்பு
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவின்பேரில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் மற்றும் போலீசார், வனச்சரகர்கள் ஆனந்தகுமார், பழனிகுமார் ஆகியோர் மோயர்பாயிண்ட் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது குகை மறைவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 6½ அடி உயரம் கொண்ட 60 கஞ்சா செடிகளை போலீசார் வேரோடு பிடுங்கி தீயிட்டு அழித்தனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
மேலும் கஞ்சா பயிரிட்டதாக வில்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (50), மன்னவனூர் கும்பூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற பாண்டி (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.
வனப்பகுதிகளுக்குள் வன ஊழியர்கள் அடிக்கடி ரோந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. வனப்பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் இருக்கும் நிலையில், வனத்துறையினர் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story