சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 May 2020 2:41 AM GMT (Updated: 21 May 2020 2:41 AM GMT)

சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது


சேலம், 

சேலம் குகை புலிக்குத்தி தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் கொரோனா வைரசால் சிலர் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அந்த டாஸ்மாக் கடைக்கு தேவையான மதுபானங்கள் லாரியில் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதையடுத்து லாரியிலிருந்து மதுபானங்களை டாஸ்மாக் கடையில் இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியில் இருந்து மதுபானங்களை இறக்க விடாமல் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்றும், அதையும் மீறி திறந்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து லாரியிலிருந்து மதுபானங்களை இறக்காமல் டாஸ் மாக் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் அந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை புலிகுத்தி தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும், எனவே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story