விவசாய பணிகள் தொடங்கியது: விவசாயிகளுக்கு தரமான விதைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை
தற்போது விவசாய பணிகள் தொடங்கியிருப்பதால் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
தற்போது விவசாய பணிகள் தொடங்கியிருப்பதால் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கொரோனா ஊரடங்கில் இருந்து விவசாய பணிகளுக்கு அரசு முழுமையாக விலக்கு அளித்தது. இதனால் விவசாய பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் உணவு உற்பத்திக்கு அடிப்படை இடுபொருளான தரமான விதைகள், விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நெல், உளுந்து, காய்கறி விதைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் இருந்து விற்பனை பட்டியலுடன் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சமூக இடைவெளி
தரமான விதைகள் இருப்பு உள்ளதா? என்பது குறித்து விதை ஆய்வாளர்களால் விதை விற்பனை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தரம், முளைப்புத்திறன் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் 229 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதை இருப்பு பதிவேடு, விதை விற்பனை பட்டியல், விதை பொட்டலங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் கொரோனா பரவாமல் இருக்க சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், தனி சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விதை ஆய்வு நெல்லை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story