சதுரகிரி மலையில் வளரும் தண்ணீர் பூண்டு செடி மருத்துவ குணம் வாய்ந்தது


சதுரகிரி மலையில் வளரும் தண்ணீர் பூண்டு செடி  மருத்துவ குணம் வாய்ந்தது
x
தினத்தந்தி 21 May 2020 9:12 AM IST (Updated: 21 May 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே சதுரகிரி மலைப்பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த தண்ணீர் பூண்டு என்ற ஒரு வகை செடி வளர்வதை தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மதுரை, 

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை உள்பட பல்வேறு இடங்களில் அரிய மூலிகை செடிகள் வளர்ந்து கிடக்கின்றன, இவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தாவரங்கள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தற்போது கண்டறியப்பட்டு தண்ணீர் பூண்டு செடியானது நீண்டகாலங்களுக்கு முன்பு நாட்டின் சில இடங்களில் காணப்பட்டது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இது காணப்பட்டது. மற்ற இடங்களில் இந்த செடியை பரவலாக காண முடிவதில்லை. உலகம் முழுவதும் காணப்படும் இந்த செடி தாவரவியல் அடிப்படையில் லின்டெரினா அல்லியோனி என்ற குடும்பத்தில் இணைக்கபட்டுள்ள லின்டெர்னியா மைக்ரந்தா என்ற பெயரை கொண்டதாகும்.

இந்த தாவரமானது, ஓரளவு மழை பொழிவுள்ள காட்டுப்பகுதிகளில் முளைக்கும் இயல்புடையது. புதர் வகை போல் வளரும் இந்த செடி ரோஸ் நிறமுள்ள பூக்களுடன் சிறிய காய்களை கொண்டுள்ளது. இந்த செடியானது பேரையூர் பகுதியை ஒட்டிய சதுரகிரி மலைப்பகுதியில் காணப்படுவது அரிதானதாகும்.

மருத்துவ பயன்

தற்போது இந்த செடியின் மருத்துவ பயன்கள் குறித்து அறிய சித்தரெட்டிபட்டியில் உள்ள மருத்துவ தாவரங்கள் ஆய்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக, இந்த தாவரமானது மலேசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுகிறது. குறிப்பாக சீனாவில் இந்த செடியை வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மேலும் புண்கள் கட்டிகள், கழலைகள் ஆகியவற்றை நீக்க இந்த செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பயன்படுகிறது.

இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தாவரவியல் ஆய்வுகளை செய்து வரும் முனைவர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது,

இந்த பகுதி மக்களுக்கு இந்த தாவரம் குறித்து சரியாக தெரியவில்லை. ஆனால், இந்த தாவரத்தை ஆடு, மாடுகள் விரும்பி உட்கொள்வதாக தெரிவிக்கின்றனர். இந்த தாவரத்தில் இருந்து சிறந்த களைக்கொல்லி மருந்து தயாரிக்க முடியும் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே, வருங்காலத்தில் இது குறித்து ஆய்வுகள் விரிவாக நடைபெறும் நிலையில் சிறந்த சித்த மருந்துகளும், வேளாண்மைக்கு தேவையான களைக்கொல்லிகளும் தயாரிக்கப்படலாம் என்றார்.

Next Story